வவுனியாவில் தொடரும் கனமழை : தாண்டிக்குளம் உடைப்பெடுக்கும் அபாயம்!
புதிய இணைப்பு
வவுனியா தாண்டிக்குளம் உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுவதால் இக்குளத்தின் கீழ் உள்ள சாந்தசோலை கிராம மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அடை மழை காரணமாக வவுனியா தாண்டிக்குளம், குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்தமையால் குளத்தின் அணைக்கட்டின் மேலாக நீர் வழிந்தோடுகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் குளத்தின் அணைக்கட்டின் பல பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அதிக நீர்வரத்து காரணமாக பல இடங்களில் அடைக்கப்பட்டு பெருமளவில் அரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக குளக்கட்டு உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வவுனியாவில்(Vavuniya) பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் பல நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம், தாதியர் கல்லூரி, அரச சுற்றுலா விடுதி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் என்பன நீரில் மூழ்கியுள்ளது.
அத்துடன், காமினி மாக வித்தியாலயம் முன்பாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் வீதி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை
இதேவேளை, வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலும் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், பல பகுதிகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன.
இந்நிலையில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், நகரசபைச் செயலாளர், மாவட்ட அனத்த முகாமைத்துவ பணிப்பாளர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் வருகை தந்து குறித்த அரச அலுவலங்கள், திணைக்களங்கள் மற்றும் வீதிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









