தொடர்ச்சியாக பெய்யும் கனமழை..! வடக்கில் முடங்கும் போக்குவரத்து (படங்கள்)
அண்மை நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாலை வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக குறித்த வீதியுடான போக்குவரத்துக்களை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வயல் நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தங்களுடைய போக்குவரத்திற்கான வழிகள் முற்றாக முடங்கியுள்ளதாகவும் எனவே சாலை அல்லது நந்திக்கடல் கழப்பினை வெட்டி நீரை கடலுக்குள் செல்ல விட்டு தமது போக்குவரத்துக்கு வழி வகைகளை செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீரை வெளியேற்ற கோரிக்கை
அவசர நிலைமைகளின் போது கூட தாங்கள் வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே மிக விரைவில் இந்த நீரை வெளியேற்றி வீதியுடான போக்குவரத்துக்கு வழி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மக்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, நந்திக்கடல் வட்டுவாகல் பாலத்தின் மேலாகவும் வெள்ள நீர் தேங்கியுள்ளது மிகவும் சேதமடைந்த இந்த பாலத்தில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பாலத்திலும் சேதங்கள் ஏற்படும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்








