மாணவர்களுக்கு மின்சார சித்திரவதை - அதிபர், காவல்துறை அதிகாரிகள் கைது
பாணந்துறை மில்லனியா மாணவர்களை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று காவல்துறை அதிகாரிகள், பாடசாலை அதிபர் மற்றும் ஒரு ஆசிரியர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அதிபர் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பிரதி அதிபர் மற்றும் காவல்துறை ஜீப்பின் சாரதி (கான்ஸ்டபிள்) ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சரின் அறிவிப்பு
இதேவேளை ஆசிரியர் ஒருவரின் பேர்ஸ் காணாமல்போனதை தொடர்ந்து மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்திய காவல்துறையினர் அவர்களை மின்சார சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் கல்வியமைச்சும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபட்டால் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டுதல் விடுக்கப்பட்டுள்ளது,பாடசாலை அதிகாரிகள் இதனை மீறினார்களா என்பது தெரியாது. விசாரணை அறிக்கைகள் முடிவிற்கு வந்த பின்னரே அது குறித்து தெரிய வரும். விசாரணைகள் முடிவடைந்ததும் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை காவல்துறையினர் துன்புறுத்தியுள்ளனர்
முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜெயவர்த்தன பாடசாலை மாணவர்களை காவல்துறையினர் துன்புறுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி -தரம் 5 மாணவர்கள் மூவர் மீது கொடூர தாக்குதல் -காவல்துறையும் உடந்தை
