மஞ்சள் கோட்டில் சோகம் - தந்தையும் மகனும் பலியான துயரம்
கண்டி, பௌவேலிக்கடை பிரதான வீதியில் மஞ்சள் கோட்டில் பயணித்த தந்தை மற்றும் மகன் இருவரும் ஜீப் வண்டியில் மோதி நேற்று முன்தினம் (16ஆம் திகதி) இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளனர்.
கண்டி, பத்தஹேவஹெட்ட, கண்டி தர்மராஜா கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைப்பாளருமான காமினி விஜயபண்டாரவின் ஜீப் வண்டியே மோதியுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன்
இந்த சம்பவத்தில் 42 வயதுடைய தந்தையும் அவரது 11 வயது மகனும் உயிரிழந்துள்ளதாக கண்டி காவல்துறை போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்த மாணவன் இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்தான்.
கண்டி பௌவேலிக்கடை சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்த சண்டிக சம்பத் ரொட்ரிகோ மற்றும் அவரது மகன் விமந்த ரொட்ரிகோ ஆகியோரே விபத்தில் உயிரிழந்தவர்களாவர்.
நீதிமன்றில் முன்னிலை
காவல்துறையால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாதஹேவாஹா தொகுதி அமைப்பாளர் காமினி விஜயபண்டார நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சந்தேக நபர் கராத்தே பயிற்றுவிப்பவர் எனவும், கராத்தே வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் எனவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்துறை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
