டிரான் அலஸுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதை விமர்சிக்கும் ஜே.வி.பி
சிறிலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு 700 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்ட நபர் தொடர்பான விடயங்களை முடியுமானால் வெளியிடுமாறு மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சவால் விடுத்துள்ளது.
இந்த நபரின் அடையாளத்தை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக தமக்கு 700 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக வழங்க சில தரப்பினர் முன் முன்வந்ததாக சிறிலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
பாதாளக் குழுக்களுக்கிடையில்
அத்துடன், அவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிரான் அலஸுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபருக்கும் அவருக்கும் கடந்த காலங்களில் தொடர்பிருந்திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குடாவெல மற்றும் கொஸ்கொட ஆகிய இரு பகுதிகளை சேர்ந்த பாதாளக் குழுக்களுக்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததாகவும், இதன் போது காலியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர், டிரான் அலஸுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபரா? எனும் கேள்வி தற்போது தமக்கு எழுந்துள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.