அடிப்படை வசதிகோரி போராட்டத்தில் சுகாதார சேவையாளர்கள்- தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் கடற்படை!
சுகாதார சேவையாளர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பானது, இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணிவரை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் செயற்பாடானது முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனை ஒழுங்குபடுத்தும் கடமைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுக்க கடற்படையின் மருத்துவப்பிரிவானது ஊசி மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
போதுமான சுகாதார பாதுகாப்பு உடைகள், முகக்கவசம், கையுறைகள் மற்றும் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான உணவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி பணிப்பகிஷ்கரிப்பானது சுகாதார சேவையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
