திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக சிற்றூழியர்களினால் ஆர்ப்பாட்டம்!
சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் இயக்கம் ஒன்றிணைந்த வகையில் வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (22) திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பங்கேற்று தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இலங்கை வைத்திய நலன்புரிச்சங்கத்தின் திருகோணமலை மாவட்ட செயலாளர் அசங்க ரவினாத், அகில இலங்கை வைத்திய சங்கத்தின் திருகோணமலை மாவட்ட செயலாளர் மொஹமட் இக்ரம் ஆகியோர் பங்கேற்று கருத்து தெரிவித்தனர்.
மருந்துகள் பற்றாக்குறை
“இன்றைய கால கட்டத்தில் வைத்தியத்துறை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, இந்நிலையில் வைத்தியசாலைகளில் மருந்துகள் பற்றாக்குறையாக காணப்படுகிறது.
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் இன்மையால் பொதுமக்கள் நாளாந்தம் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலையினை வெளிக்கொணர எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலமாக அரசுக்கு அழுத்தத்தை பிரயோகித்து அதனூடான தீர்வொன்றை பெற தாம் தொடர்ச்சியாக போராடி வருகிறோம்” என குறிப்பிட்டனர்.