அவுஸ்ரேலியாவில் விபரீத முடிவெடுத்த தமிழ் புகலிட கோரிக்கையாளர்
அவுஸ்ரேலியாவின் மெல்பேன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்து வந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையைச் சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விபரீத முடிவை டுத்து தனது உயிரை மாய்த்தவராவார்.
உள்நாட்டு போர் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற இவர் கடந்த 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சென்று புகலிடம் கோரினார்.
இவர் தற்காலிகமாக தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்தது என்றும், எட்டு ஆண்டுகளாக நிரந்தர பாதுகாப்பு தனக்குக் கிடைக்குமா என்ற ஏக்கத்துடனும் கேள்வியுடனும் வாழ்ந்த அவர், பல மன உழைச்சலுக்கு உள்ளாகியிருந்தார் என்றும் தெரியவருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, தன் உடல் மீது பெற்றோல் ஊற்றித் தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டார் என்று தமிழ் ஏதிலிகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.