கொரோனா அச்சம்- உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோரி பகிஸ்கரிப்பு!
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை முதலில் அவர்கள் தான் கையாளுகின்றார்கள் எனவும் அதற்குப் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வைத்தியசாலை வட்டாரங்கள் தமக்கு பெற்றுத் தரவில்லை எனவும் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
சமூக இடைவெளியை பேணி முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து சிற்றூழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஆர்க்காட்டத்தில் பங்குபற்றியவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு அங்கிகள், கையுறைகள், முகக் கவசங்கள் என்பன அரசாங்கத்தாலோ வைத்தியசாலை நிர்வாகத்தினராலோ வழங்கப்படுவதில்லை எனவும் தமது சொந்த செலவிலேயே இவற்றினை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சிற்றூழியர்களுக்காக அரசினால் வழங்கப்பட்டிருக்கும் நீல நிற அங்கியைக்கூட வைத்தியசாலை நிர்வாகம் இன்னமும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
