புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடைசி அதிரடி எச்சரிக்கை
அரை மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தற்காலிக அகதிகள் அந்தஸ்தை அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கியூபா (Cuba), ஹெய்தி (Haiti), நிகரகுவா (Nicaragua) மற்றும் வெனிசுலாவைச் (Venezuela) சேர்ந்த மக்களின் தற்காலிக அகதிகள் அந்தஸ்தே இவ்வாறு ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) காலத்தில் மனிதாபிமான பரோல் திட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த இவர்கள் எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் சிக்கலை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
வேலைக்கான உரிமம்
இந்த 532,000 பேர்களின் வேலைக்கான உரிமம் மற்றும் வெளியேற்றப்படுவதில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் செயலாளர் கிறிஸ்டி நோயம், இந்த 532,000 பேர்களின் அகதி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதையும், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்பதையும் உறுதி செய்துள்ளார்.
தங்கும் உரிமை
ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு பிறகு இந்த மக்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் தங்கும் உரிமை இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி பைடன் கடந்த 2022 இல் சர்ச்சைக்குரிய CHNV என்ற அகதிகள் திட்டத்தைத் தொடங்கினார். முதலில் வெனிசுலா மக்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், பின்னர் அது மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
அதாவது நிதி உத்தரவாதம் அளிக்க முன்வரும் புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்காவில் வசிக்கவும் வேலை செய்யவும் இரண்டு வருட அனுமதி வழங்க இந்த திட்டமானது உறுதி அளிக்கிறது.
மக்களின் வேலை
அத்தோடு, புலம்பெயர் மக்கள் சட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் நுழையவும் ஊக்குவிக்கப்பட்டார்கள் ஆனால் பைடன் ஆட்சி காலத்தில் சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் நுழைந்த மில்லியன் கணக்கான மக்களை கட்டாயம் வெளியேற்றுவேன் என ட்ரம்ப் தமது பரப்புரைகளின் போதே தெரிவித்து வந்தார்.
இந்த நிலையிலேயே CHNV என்ற அகதிகள் திட்டத்தை தற்போது ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளதுடன் இந்த திட்டத்தால் அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையானது பொறுப்பற்றது, கொடூரமானது மற்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என குறிப்பிட்டு நீதி நடவடிக்கை மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனரான Karen Tumlin நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு தேவையற்ற குழப்பத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்