தொலைபேசி வாயிலாகத் தொடரும் அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் தொலைபேசி வாயிலாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்லவிருந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவைத் தான் திரும்பப் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை முரண்பாடு
தமக்கு ஏற்புடையதாக இல்லாத ஒரு ஒப்பந்தத்திற்காக அவ்வளவு தூரம் பயணம் செய்வது தேவையற்றது என அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரானின் சமீபத்திய ஒப்பந்தத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, அத்தகைய இணக்கமான நிலையைத் தாங்கள் இன்னும் எட்டவில்லை என்று அவர் பதிலளித்துள்ளார்.
தற்போதைய பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் கொள்கை முரண்பாடு நிலவி வருகிறது.
தீர்க்கமான முடிவு
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு முற்றுகை நீக்கப்பட்ட பின்னரே தனது அணுசக்தித் திட்டம் குறித்து விவாதிக்க முடியும் என்பது ஈரானின் திட்டமாக உள்ளது.

இருப்பினும், வெள்ளை மாளிகையைப் பொறுத்தவரை அணுசக்தி விவகாரமே முதன்மையானது மற்றும் மையப்பகுதியானது (Front and centre) என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் பிடிவாதமாக உள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் முன்கூட்டியே ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படாமல் மற்ற சலுகைகளை வழங்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதை இது காட்டுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |