ட்ரம்புக்கு பைடன் புகழாரம்
கொரோனா வைரசுக்கு விரைவாக தடுப்பூசி கண்டுபிடித்து, அதனை அமெரிக்க மக்களுக்கு வழங்கியமைக்காக தற்போதைய அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வோஷிங்டன் வெள்ளை மாளிகையில் இருந்தவாறு நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரையில், ட்ரம்பின் நிர்வாகத்துக்கு தனது நன்றியினையும் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“ தடுப்பூசி போட வில்லை என்றால், நீங்கள் கொரோனா தொற்றின் தாக்குதலுக்கு ஆளாவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நாம் அனைவரும் ஒமைக்ரோன் தொற்றுப் பற்றி கவலை கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பதற்றம் அடையத்தேவையில்லை.
ஆனால் தடுப்பூசி போடாத நிலையில், தொற்று ஏற்பட்டால் வைத்தியசாலையில் சேர்க்கும் நிலை வரும். மரணம் அடையவும் வாய்ப்பு உள்ளது.
தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாக நேரிட்டாலும், அவர்கள் தீவிரமான நோயில் இருந்தும், மரணத்தில் இருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.
எனவே அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் தேர்வு, வாழ்க்கைக்கும், மரணத்துக்கும் இடையேயான வித்தியாசமாக இருக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.