ஆழிப்பேரலையின் அவலங்களை சுமந்து யாழில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்(படங்கள்)
இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இலங்கையை சுனாமி ஆட்கொண்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்த நிலையிலேயே இந்த நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டது
இந்த நிகழ்வின்போது, சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
பின்னர் இலங்கை தேசியக் கொடியை மருதங்கேணி காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏற்றிவைத்தார்.
அதேபோல், பொதுச்சுடரை மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளைப் படைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆழிப்பேரலை பேரனர்த்தம்
இதன்போது பெருமளவான பொதுமக்கள்,மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் உறவினர்கள் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் ததும்ப அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004 டிசம்பர் 26ஆம் திகதி இதே நாளன்று ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |