செயலிழந்துள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் : புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள இடர் முகாமைத்துவ நிலையம்!
இலங்கையில் உள்ள 77 சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்களில் தற்போது 20 மாத்திரம் சரிவர இயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இடர் முகாமைத்துவ நிலையத்திடம் இருந்து சர்வதேச ஊடகமொன்று பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில், இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் அமைக்கப்பட்ட சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்கள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால், தற்போது அவற்றுள் 57 கோபுரங்கள் முற்றாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்கள்
காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 8 சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்களில், தற்போது 2 மாத்திரம் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 9 சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்களில் தற்போது ஒரு கோபுரம் மாத்திரமே இயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் உள்ள 7 சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்களும், கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, நிந்தவூர் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கோபுரங்களும் முற்றாக செயலிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்
இதேவேளை, இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திலிருந்து 11 கோபுரங்களை இயக்க முடியும் என்பதுடன் மேலும் 9 கோபுரங்களுக்கு அருகில் சென்றால் மாத்திரமே இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரங்கள் தொடர்பான தொழில்நுட்பம் காலாவதியாகியுள்ளதால் அவற்றை தயாரித்த நிறுவனம், அதன் உபகரண தயாரிப்பையும் நிறுத்தியுள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், தொலைபேசி நிறுவனங்களுடன் இணைந்து புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த இடர் முகாமைத்துவ நிலையம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |