இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் : போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு!
இலங்கையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நடத்துவதற்கான முழு தொகையும் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒதுக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நிதி அமைச்சர் என்ற வகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஊடாக 10 பில்லியன் ரூபாய் மாத்திரம் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ளூராட்சிமன்ற, அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த 20 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
வரவு செலவு திட்ட ஒதுக்கீடு
எனினும், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக 10 பில்லியன் ரூபாய் மாத்திரம் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அனைத்து தேர்தல்களையும் நடத்த குறித்த நிதி போதாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிபர் தேர்தலுக்காக மாத்திரம் 10 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு குறித்த தேர்தலை மாத்திரம் நடத்த முடியுமென ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |