யாழ்ப்பாணத்தில் மீறப்படும் தடை உத்தரவு - நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்க அதிபர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தினங்களில் பிரத்தியேக வகுப்புகள் இடம் பெறுவதாக கிடைத்துள்ள தகவல்களைத் தொடர்ந்து அவர்களும் இந்த விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (17) தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
வகுப்புக்களுக்கான அனுமதி
வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புக்ளை நிறுத்துவதற்கு தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறப்பட்டது, அதேவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் மதியத்திற்குப்பின்னர் வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
09 ஆம் வகுப்பிலிருந்தே க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான தயார்ப்படுத்தல்கள் ஆரம்பிக்க இருப்பதனால் வகுப்புக்களை இடைநிறுத்துவது மாணவர்களைப் பாதிக்கும் என்றும் கூறப்பட்டது.
எவ்வாறு தனியார் கல்வி நிலையங்கள் வகுப்புக்களை நிறுத்துகின்றதோ பிரத்தியேக வகுப்புக்களும் அதேபோல் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அதேவேளை அவர்கள் முறையாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் கோரப்பட்டது.
பிள்ளைகளுக்கு உளப்பாதிப்பு
இதற்கு பதிலளித்த வேளை 07 நாட்களும் தொடர்ச்சியாக பிள்ளைகள் கல்வி நடவடிக்கைளில் ஈடுபடுவது அவர்களிற்கு உளப்பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனை குறைப்பதற்காகவும், பிள்ளைகளின் உளசமூக செயற்பாட்டினை மேம்படுத்தி அறநெறிக்கல்வியினை ஊக்குவிக்கும் முகமாகவும், சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.