A-9 வீதியில் கோர விபத்து : சிறிலங்கா இராணுவ அதிகாரி உட்பட மூவர் பலி
கண்டி-யாழ்ப்பாணம் A-9 வீதியில் மிஹிந்தலை மற்றும் திரப்பன பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் இராணுவ மேஜர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை மற்றும் திரப்பன காவல்துறையினர் தெரிவித்தனர்.
மிகிந்தலை வெல்லமோரண பகுதியில், ஏ-9 சாலையின் 128 மற்றும் 129 கிலோமீட்டர்களுக்கு இடையில், கடந்த 14 ஆம் திகதி இரவு நடந்த வீதி விபத்தில், கல்குலமவிலிருந்து மிகிந்தலை நோக்கிச் சென்ற டாக்ஸி ஒன்று, வீதியை விட்டு விலகி தெற்கு நோக்கிச் சென்று, போக்குவரத்து சிக்னல் மற்றும் ஒரு கல்வெட்டில் மோதியதில் இருவர் உயிரிழந்ததாக மிகிந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதல் விபத்தில் இராணுவ மேஜர் உட்பட இருவர் பலி
உயிரிழந்தவர்கள், பளுகஸ்வெவ, நுக செவன கண்டி வீதியில் வசிக்கும் செனவிரத்ன கவிந்து உதார செனவிரத்ன என்ற 25 வயதுடைய கெப் சாரதியும்,அனுராதபுரம், ரணசேவபுர, 21வது காலாட்படை பிரிவில் பணியாற்றும் இராணுவ மேஜரான மிஹிந்தலை, அனுராதபுரம் வீதியைச் சேர்ந்த நிஸ்ஸங்க ஆராச்சிலகே தினேஷ் இசுரு குமார நிஸ்ஸங்க என்ற 37 வயதுடைய நபரும், ஆவர்.
விபத்தில் பலத்த காயமடைந்த கெப் வண்டியின் சாரதி, மிகிந்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரவு 10.50 மணிக்கு உயிரிழந்தார். அதே நேரத்தில், பலத்த காயங்களுடன் அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மேஜர், நேற்று (15) அதிகாலை 12.50 மணிக்கு உயிரிழந்தார் என்று மிகிந்தலை காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
மற்றைய விபத்தில் பேரனுடன் சென்ற தாத்தா பலி
ஏ-9 சாலையில் திரப்பனையிலிருந்து கல்குளம் நோக்கிச் சென்ற மற்றுமொரு வான், ஞானிகுளம் பாலத்தைக் கடந்த பிறகு, வீதியை விட்டு விலகி 118 மற்றும் 119 கிலோமீட்டர் தூரத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக திரப்பன காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சிவாலக்குளம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த என். கபுருபண்டா என்ற 93 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வான் சாரதி தனது தாய், தந்தை மற்றும் தாத்தாவுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது, வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் காயமடைந்து அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சந்தேக நபரான சாரதியின் தாத்தா இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் தொடர்புடைய வானின் சாரதி, சிவாலகுளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, இரண்டு லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டார். சந்தேக நபரை ஜூன் 5 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிடப்பட்டது.
இந்த இரண்டு விபத்துக்கள் குறித்து மிகிந்தலை மற்றும் திரப்பன காவல் நிலையங்களைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் அடங்கிய இரண்டு குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
