வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக பண மோசடி! இருவர் கைது
இஸ்ரேலில் கட்டுமானம் மற்றும் ஹோட்டல் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு மற்றும் காவல்துறை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத் தலையீட்டின் மூலம் வழங்கப்படும் பணி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, இணையதளம் ஊடாகப் பணம் பறிக்கப்படுவதாக வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டுகள்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் எனவும், மற்றவர் பெலியத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து 7 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும், போலியான இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஒப்பந்தப் பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சந்தேக நபர்கள் பணியகத்தின் அதிகாரிகளைப் போல நடித்து, வேலை தேடுபவர்களைப் பலமுறை பணியகத்திற்கு வரவழைத்து நம்பவைத்து ஏமாற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோசடியின் பின்னணி
முன்னதாக இதே போன்ற இஸ்ரேலிய வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தனி மெனிக்கே என்ற பெண்ணின் வழிகாட்டலிலேயே இவர்கள் செயல்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், பணியகத்தின் சேவைகளைப் பெற விரும்புவோர் உரிய அதிகாரிகள் அல்லது வரவேற்பு கவுண்டரில் உள்ளவர்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும், தரகர்கள் அல்லது அடையாளம் தெரியாத நபர்களுடன் தொடர்புகொள்வதைத் தவிர்க்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |