மட்டக்களப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது
மட்டக்களப்பு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இரு சந்தேக நபரை கரடியனாறு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை கரடியனாறு, பெரிய புல்லுமலை பகுதியில் நேற்று (11.04.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செங்கலடி - பதுளை வீதியில் உள்ள பெரிய புல்லுமலை பிரதான வீதியில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றில் நேற்று (11.04.2026) அதிகாலை புதையல் தோண்டும் நடவடிக்கையில் குறித்த சந்தேக நபர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாரி இருவர் கைது
இந்நிலையில், விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படை வீரரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் விசேட அதிரடிப்படை வாகன சாரதியான காவல்துறை அதிகாரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 3 விசேட அதிரடிப்படையினர், ஒரு காவல்துறை அதிகாரி, 2 பொது மக்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |