மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு விபத்து : 11 பேர் பலி
தெற்கு இத்தாலியில் (Italy) மத்திய தரைக்கடல் பகுதியில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியதில் 11 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 64 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை, ஜேர்மன் (German) தொண்டு நிறுவனம், இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) அகதிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜேர்மன் உதவிக் குழுவின் நாதிர் மீட்பு கப்பல், இத்தாலியின் லம்பேடுசா தீவுக்குச் சென்று கொண்டிருந்தபோது குறித்த படகு விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது.
ஜேர்மன் உதவிக் குழு
விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருந்த படகிலிருந்து 51 பேரை மீட்டதோடு, அதில் மயக்கமடைந்த இருவர் உட்பட கப்பலின் கீழ் தளத்தில் 10 உடல்கள் சிக்கியிருந்ததாக ஜேர்மன் உதவிக் குழுவான RESQSHIP தெரிவித்துள்ளது.
இதேவேளை உயிர் பிழைத்தவர்கள் இத்தாலிய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு திங்கட்கிழமை காலை கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த படகு சிரியா (Syria), எகிப்து (Egypt), பாகிஸ்தான் (Pakistan) மற்றும் பங்களாதேஷ் (Bangladesh) ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு லிபியாவில் (Libya) இருந்து சென்றுள்ளது.
இதேவேளை, இத்தாலியின் கலாப்ரியாவில் இருந்து கிழக்கே சுமார் 200 கி.மீ. (125 மைல்) தொலைவில் துருக்கியில் (Türkiye) இருந்து புறப்பட்ட இரண்டாவது படகு தீப்பிடித்து கவிழ்ந்துள்ளது.
இத்தாலிய கடலோர காவல்படை
அந்த படகிலிருந்த 64 பேர் கடலில் காணாமல் போயுள்ளதோடு, 11 பேரை இத்தாலிய கடலோர காவல்படையினர் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதில், உயிரிழந்த பெண்ணின் உடலும் இருந்துள்ளது.
குறித்த படகில் ஈரான் (Iran), சிரியா மற்றும் ஈராக் (Iraq) ஆகிய நாடுகளில் இருந்து அகதிகள் சென்றுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு முதல் மத்திய மத்தியதரைக் கடலில் 749 பேர் உட்பட 23,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
இது உலகின் மிகவும் ஆபத்தான இடம்பெயர்வு பாதையாக உள்ளதுடன் இந்த மாத தொடக்கத்தில் லிபியா கடற்கரையில் கடலில் இருந்து மட்டும் 11 உடல்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |