யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து டக்ளஸ் நேரில் ஆராய்வு
செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சாதக பாதகங்கள்
இந்நிலையில் அமைச்சர் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார், இதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழை நீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு கள விஜயம் சென்ற அமைச்சர் நிலமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
காணொளி வடிவிலாள திட்டவரைபு
பின்னர் இதற்கு காணொளி வடிவிலான திட்டவரைபை தனக்கு தருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், கோப்பாய் பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைசார்ந்தவர்கள் உடனிருந்ததாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |