வீடொன்றில் நிகழ்ந்த அனர்த்தம் இருவருக்கு ஏற்பட்ட துயரம் - மேலும் பலர் வைத்தியசாலையில்
மல்வான, யட்டியான பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.பலர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 63 வயதுடைய வீட்டு உரிமையாளர் மற்றும் வீட்டை நிர்மாணிப்பதற்காக வந்திருந்த 51 வயதான பண்டாரகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்தவர்களாவர்.
வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக வெட்டப்பட்ட குழியில் குறித்த தொழிலாளி இறங்கியுள்ளார். இதன்போது குறித்த தொழிலாளி குழியில் மயங்கி விழுந்துள்ளதாகவும், அவரை மீட்பதற்காக குழியில் இறங்கிய மற்றுமொருவரும் அங்கு மயங்கி விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், வீட்டு உரிமையாளரும் அவர்களை மீட்க குழிக்குள் இறங்கியுள்ள நிலையில் அவரும் உள்ளே மயங்கி விழுந்தார்.
குழியில் இருந்தவர்களை மீட்பதற்காக மேலும் இருவர் குழிக்குள் இறங்கியுள்ள நிலையில் அவர்களும் மயக்கமடைந்துள்ளனர்.
இதனையடுத்து மயக்கமடைந்தவர்களை மீட்க ஒக்ஸிஜன் சுவாசக் கருவியுடன் குழிக்குள் இறங்கிய மற்றுமொரு நபர் அவர்களை மீட்டுள்ளார். மயக்கமடைந்தவர்கள் பின்னர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளரும் முதலில் குழியில் இறங்கிய பணியாளரும் உயிரிழந்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இருவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
பியகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
