அதிகளவான பயணிகளால் விபத்துக்குள்ளான பேருந்து! இருவர் பலி: பேருந்தை தீயிட்டு கொளுத்திய மக்கள் (படங்கள்)
பேருந்து விபத்து
பெரட்டாசி தோட்டத்திலிருந்து புஸ்ஸலாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிவந்த பேருந்து புஸல்லாவை, காச்சாமலை பகுதியில் இன்று (11.07.2022) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து மண்திட்டில் சாய்ந்ததாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக சன நெருக்கடி

அதிக சன நெருக்கடி காரணமாக மிதிப்பலகையில் பயணித்த இருவரே குறித்த விபத்தின் போது உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் சுரேன்ஜித் புஷ்பகுமார் (39 வயது) மற்றும் ஹெல்போட 7ம் கட்டை தோட்டத்தில் வசிக்கும் விஜயகுமார் கவிஷ்கர் (20 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் 80 பேர் வரை பேருந்தில் பயணித்துள்ளதாகவும் அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பேருந்தை தீயிட்டு கொளுத்திய மக்கள்

சிறு காயங்களுக்குள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்டுகின்றது.
விபத்து சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், பேருந்தை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்து சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

