வழக்கு விசாரணை நடுவே நீதிபதியை தாக்கிய காவல்துறையினர் - பீகாரில் பரபரப்பு
வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதியை, காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து இருவர் அடித்து உதைத்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தை பரபரப்பாக்கி உள்ளது.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜான்ஹர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக இருப்பவர் அவினாஷ் குமார். இன்று அவர் வழக்குகள் விசாரணையில் ஈடுபட்டிருந்த போது நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வந்திருந்த காவல்துறை ஆய்வாளரும், உதவி ஆய்வாளர் ஒருவரும், நீதிபதி அவினாஷ் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கோகர்திஹா காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்து வரும் கோபால் பிரசாத் மற்றும் துணை காவல் ஆய்வாளரான அபிமன்யு குமார் ஆகிய இரு அதிகாரிகளும் இன்று வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராக வந்திருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதி அவினாஷை இருவரும் சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
நீதிபதியின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், நீதிபதியை தாக்கிய காவல்துறை அதிகாரிகளை தடுக்கச் சென்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சிலரையும் இருவரும் அடித்து காயப்படுத்தியதாக தெரியவந்திருக்கிறது.
சம்பந்தப்பட்ட நீதிபதி தற்போது நலமுடன் இருப்பதாகவும், திடீர் தாக்குதல் சம்பவத்தால் அவர் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.