ஐ.நா அமைதிப்படை வீரர்கள் மீது தாக்குதல்
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் பிணைகைதிகளாக கடத்தி சென்றுள்ளனர்.
மேற்கு ஆபிரிக்காவில் கேம்பியா நாட்டிற்கு அருகே அமைந்துள்ள நாடு செனகல். இந்நாட்டில் கசமன்சா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தை தனியாக பிரித்து தன்னிச்சையாக செயல்படும் நோக்கத்தோடு கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கையிலும் உள்நாட்டு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை அண்டை நாடான கேம்பியாவிலும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையில் ஐ.நா. தலைமையிலான அமைதிப்படையில் செனகல் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கேம்பியா நாட்டில் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த செனகல் வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 செனகல் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 9 வீரர்களை கிளர்ச்சியாளர்கள் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து சென்றனர்.
இந்த மோதலின் போது கிளர்ச்சியாளர்களில் ஒருவன் கொல்லப்பட்டார். மேலும், 3 கிளர்ச்சியாளர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட வீரர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்று தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
