திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருளுடன் நால்வர் கைது
திருகோணமலை - ஈச்சிலம்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சிலம்பற்று காவல்துறையினருடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நேற்றிரவு(13) வெருகல் வீதித்தடையில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் போது குளிரூட்டப்பட்ட பாரவூர்தியில் இருந்து 50 கிராம் 220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது
களுவாஞ்சிக்குடியிலிருந்து இலங்கைத் துறைமுகத்துவாரத்திற்கு மீன்களை எடுத்துச் சென்ற குளிரூட்டி பாரவூர்தியிலிருந்தே இவ் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27, 30, 35, 39 வயதுடைய களுவாஞ்சிக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஈச்சிலம்பற்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் குறித்த குளிரூட்டி வாகனமும் ஈச்சிலம்பற்று காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
