ஜப்பானிய முதலீட்டாளருக்கு வழங்கப்படும் புறக்கோட்டை மிதக்கும் சந்தை!
புறக்கோட்டை மிதக்கும் சந்தை வளாகத்தை ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவருக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விட நகர மேம்பாட்டு ஆணையம் தயாராகி வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர் ஏற்கனவே நகர மேம்பாட்டு ஆணையத்திற்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதுடன் இந்த வளாகம் முழுவதுமாக குத்தகைக்கு விடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புறக்கோட்டை மிதக்கும் சந்தை வளாகத்திலுள்ள கடைகள் மற்றும் இரவு சந்தையை நவீனமயமாக்குவதே ஜப்பானிய முதலீட்டாளரின் திட்டம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜப்பானிய முதலீட்டாளர்
தற்போதைய கடை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் முன்னாள் நகர மேம்பாட்டு அமைச்சர் அனுர கருணாதிலகா தனது பதவிக் காலத்தில் ஜப்பானிய முதலீட்டாளரை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குத்தகை தொடர்பாக நகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் நேற்று (25.11.2025) விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
இந்த மிதக்கும் சந்தை வளாகம் முதன்முதலில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கடந்த 2014 ஆம் ஆண்டு 344 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் இரண்டு பெரிய உணவகங்கள் உட்பட 92 கடைகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில், நகர மேம்பாட்டு ஆணையம் இதற்காக கூடுதலாக 50 மில்லியன் ரூபாயை செலவிட்டது.
கொரோனா தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் மிதக்கும் சந்தை குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்வதற்கும் இந்த திட்டம் முதலில் திட்டமிடப்பட்டது. எனினும், வீதியோர வியாபாரிகள் இங்கு வர்த்தகம் செய்ய ஆரம்பித்ததன் மூலம் திட்டத்தின் முதன்மை நோக்கம் மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், குறித்த வளாகம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு இன்றி இயங்கி வருவதுடன் ஜப்பானிய முதலீட்டாளரின் கீழ் முழு வளாகத்தையும் நவீனமயமாக்க ஒரு புதிய திட்டம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |