தமிழருக்காக விரைவில் மற்றுமொரு பிரதேச சபை?
புத்தளம், உடப்பு பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களை இணைத்து புதிய பிரதேச சபை ஒன்றை உருவாக்கித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக் கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் உடப்பு பிரதேச சமூக பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் கடந்த (08)ஆம் திகதி சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.
இதன்போது உடப்பு நகரைச் சூழவுள்ள பிரதேசத்தில் சுமார் 10,000 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றதையடுத்து தமிழ் பிரதேச சபை ஒன்றை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்தனர்.
அத்துடன் உடப்பு நகருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மீனவர் இறங்குதுறை ஒன்றுக்கான தேவை இருப்பதனால் அதனை அமைத்துத் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி தமிழ் பிரதேச சபையை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததுடன்,
கடலரிப்பு மற்றும் இறங்குதுறை போன்ற விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் உறுதியளித்தார்.

