பொதுஜன பெரமுனவுக்குள் வலுக்கும் மோதல்!
எனது பலத்தை உலகிற்கு காண்பிக்க உதவி புரிந்த பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு புண்ணியம் கிடைக்கப் பெறவேண்டும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எதிர் கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சாகர காரியவசத்தின் செயற்பாட்டால் எதிர்தரப்பினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக கொள்ள முடியும். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையினால் பொதுச்செயலாளரே நெருக்கடிக்குள்ளாகுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து, அமைச்சரவை தீர்மானத்தை எதிர்த்து கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவிற்கு பதில் வழங்கியதுடன் . மூன்று விடயங்கள் தொடர்பில் நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்தேன். நான் முன்வைத்த சவால் குறித்து இதுவரையில் எவ்வித பதிலும் அவர் தரப்பில் இருந்து கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் விலையினை அதிகரிக்கும் அதிகாரம் வலுசக்தி அமைச்சுக்கு மாத்திரம் கிடையாது. எரிபொருள் விலையினை அதிகரிக்கும் தீர்மானம் வாழ்க்கை செலவு தொடர்பிலான உபகுழுவின் ஆலோசனைக்கு அமைய எடுக்கப்பட்டது.
இத்தீர்மானத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் முக்கிய பல அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கு கொள்கிறார்கள். எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானத்தை நான் தனித்து எடுக்கவில்லை. என்பதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் முக்கிய பல அமைச்சர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இதன் ஊடாக எனது பலம் வெளிப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு புண்ணியம் கிடைக்க வேண்டும். எதிர் தரப்பினர் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளார்கள்.
இதனையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ள முடியும். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையினால் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமே நெருக்கடிக்குள்ளாகுவார் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.