பேராசிரியர் ரவீந்திரநாத்தை பிள்ளையானுக்கு யார் என்றே தெரியாதாம்! கம்மன்பிலவின் அடுத்த சர்ச்சை
தடுப்பு காவலில் உள்ள பிள்ளையானுக்கு காணாமல் போயிருக்கும் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் யார் என்றே தெரியாது என அவரது சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
90 நாட்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானை அவரது சட்டத்தரணியான பிவிதுறு ஹெலஉறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று சந்தித்துள்ளார்.
பிள்ளையானின் அடிப்படை மனித உரிமைகள் மீதான மனு விசாரணை நாளை கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பில் கலந்துரையாட அவரை சந்திக்க வந்ததாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பேராசிரியரை தெரியாத பிள்ளையான்
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கம்மன்பில, “பிள்ளைாயன் தற்போது ஏழரை மாதங்களுக்கும் மேலாக சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அரசாங்கத்தினால் தொடர்ந்து தாமதப்படுத்தப்படுவதன் காரணமாக நாளைய தினமே வழக்கு விசாரணைக்கு வருகிறது.

பிள்ளையான் மீது இருக்கும் குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்று நாட்டில் கூறப்பட்டாலும், அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, பேராசிரியர் ஒருவர் காணாமல் போயிருப்பது தொடர்பில் ஆகும்.
இந்த நிலையில், இவ்வாறு காணமல் போயிருக்கும் பேராசிரியர் யார் என்பது கூட பிள்ளையானுக்கு தெரியாது.
இந்நேரத்தில் இவ்வாறான விடயங்களை நாம் பேச முடியாது, நாளை வழக்கு விசாரணை இருப்பதன் காரணமாக அவற்றை ஊடகங்களுக்கு முன்னால் வெளியிடுவது சட்டத்திற்கு முரணானதாகும்.” என்றார்.
பிள்ளையானின் கைது
2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைதொடர்ந்து, பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.