நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் ஏழு பில்லியன் கடனை செலுத்த அரசாங்கம் தயார் - உதய கம்மன்பில
இலங்கையில் தற்போது மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், அரசாங்கம் 07 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்த தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். என ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்க முடியாத காரணத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியே இன்று வன்முறையாக மாறியுள்ளது.
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மக்கள் நம்பும் அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை தேர்தலுக்கு தள்ள முடியாது என்பதால், நாட்டை குழியில் இருந்து மீட்க இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்.
கடந்த இரண்டு வருடங்களில் செய்ய வேண்டியதைச் செய்யாததன் விளைவுகளைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். இருப்பினும் அரசாங்கம் இன்னும் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. உதாரணமாக இன்று மக்களுக்கு மின்சாரம் இல்லை, எரிபொருளில்லை, மருந்து இல்லை.
ஆனால் கடந்த ஏழு நாட்களாக கடனை செலுத்திய அரசாங்கம் நாங்கள் என்று அரசாங்கம் மிகவும் பெருமையுடன் கூறுகின்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளை இலங்கை அரசாங்கம் வழங்கத் தவறியமை நாட்டுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதை இன்று முழு உலகமும் அறியும்.
எனவே, கடனை செலுத்த முடியாத நிலையில் இலங்கை இருப்பதை உலகமும் புரிந்து கொண்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
