எனது மதிப்பு விளங்கவில்லை - அரசு மீது கடும் அதிருப்தியில் முன்னாள் தூதுவர்
கொரோனா தொற்றின் மத்தியிலும் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்காற்றிய ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சுற்றுலா பயணிகளை அழைத்துவருவதில் தான் மேற்கொண்ட முயற்சியின் மதிப்பு இலங்கைக்குத் தெரியாது என்று கூறி இது தொடர்பில் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாக பேஸ்புக் பதிவொன்றில் வீரதுங்க தெரிவித்தார்.
"இந்த நேரத்தில் ஒரு நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவது எவ்வளவு கடினம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை," என்று அவர் கூறினார். உதயங்க வீரதுங்க டிசம்பர் முதல் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்தார்.
"எங்கள் சொந்த அரசாங்கத்திற்குள்ளேயே நான் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நான் பிரதமருக்கு ஒரு வாக்குறுதியை அளித்தேன், இந்த முயற்சியில் எப்படியாவது வெற்றி பெறுவேன் என்று நான் சொன்னேன், ”என்றார் வீரதுங்க.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் இலங்கையர்களின் பார்வையும் படிப்படியாக மாறியது என்று அவர் கூறினார். "இலங்கையர்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஏற்கவில்லை என்றால், நாங்கள் சுற்றுலாத் துறையை வெற்றிகரமாக மாற்ற முடியாது," என்று அவர் தெரிவித்தார்.
மார்ச் 2020 இல் முதல் கொரோனா வைரஸ் அதிகரித்த பின்னர் இலங்கை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததில் இருந்து முதல் சுற்றுலாப் பயணிகளின் குழு 2020 டிசம்பரில் இலங்கைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.