கசிந்த FIFA கடிதத்தால் வெடித்த சர்ச்சை - போட்டிகளை புறக்கணிப்போம்: பறந்த எச்சரிக்கை
உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கியமான போட்டிகளின் உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு மாற்றும் ஃபிஃபாவின் திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதன் அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிப்போம் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நேற்று (29.07.2026) நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், அதன் 55 உறுப்பினர் நாடுகளும் ஒருமனதாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளன.
ஃபிஃபா தரப்பில் விளக்கம்
ஃபிபா (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ, உலகக் கோப்பைப் போட்டிகளில் கணிசமான பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில், 'ஃபிபா பார்வர்ட் என்டர்பிரைஸ்' (Fifa Forward Enterprise) என்ற பெயரில் புதிய துணை நிறுவனம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கசிந்த கடிதம் ஒன்றின் மூலம் உலகக் கோப்பைப் போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதித்தால் உறுப்பு நாடுகளுக்குக் கிடைக்கும் நிதி ஊக்கத்தொகை குறித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இந்தத் திட்டத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டால் 1,000 கோடி டாலர் (சுமார் 750 கோடி பவுண்டு) நிதித் தொகுப்பு வழங்கப்படும் என்றும், ஏற்காவிட்டால் 270 கோடி டாலர் (சுமார் 200 கோடி பவுண்டு) மட்டுமே வழங்கப்படும் என்றும் இன்பான்டினோ உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கால்பந்து அமைப்புகளுடன் எந்தவொரு கலந்தாலோசனையும் செய்யாமல், இரகசியமாக இந்த முடிவை எடுக்க முயன்றதாக ஃபிஃபா மீது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், இந்த புதிய நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் ஃபிஃபாவிடமே இருக்கும் என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சிறுபான்மை பங்குகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் ஃபிஃபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |