வரலாற்றில் மிகப்பெரும் சாதனை படைக்க பிரித்தானிய பிரதமர் அழைப்பு
உலகிலுள்ள அனைவருக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசி மருந்தை ஏற்றுவதை உறுதி செய்யும் வகையில் ஏனைய செல்வந்த நாடுகளின் தலைவர்களை வலியுறுத்தப் போவதாக பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் எதிர்வரும் 11 தொடக்கம் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் உலகளாவிய தடுப்பூசி மருந்து விநியோகம் தொடர்பான திட்ட இலக்கை முன்வைக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள உலகளாவிய கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசி விநியோக திட்டத்திற்கு எவ்வளவு தடுப்பூசி மருந்துகளை வழங்க முடியும் என்பதை அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன.
எனினும் தமது நாடு பங்களிக்க கூடிய தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை பிரித்தானியாவும் கனடாவும் இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில் கொடூரமான கொரோனா தொற்று நோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தம்முடன் கைகோர்க்குமாறு ஜி 7 அமைப்பிலுள்ள சக நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதாக பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ்சினால் ஏற்பட்ட பேரழிவு, மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சக நட்பு நாடுகளை கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை எட்டும் பட்சத்தில், அது மருத்துவதுறை வரலாற்றில். மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என பிரித்தானியப் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.