பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த முக்கிய மூன்று நாடுகள்: அதிரடி அறிவிப்பு
பலஸ்தீனத்தை (Palestine) தனி நாடாக பிரித்தானியா (United Kingdom), கனடா (Canada) மற்றும் அவுஸ்திரேலியா (Australia) ஆகிய நாடுகள் முறைப்படி அங்கீகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், பலஸ்தீனத்தில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்பதே தங்களின் நிலைப்பாடு எனவும் குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பில் மூன்று நாட்டின் பிரதமர்களும் முக்கிய அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.
கனடாவின் அறிக்கை
இதுதொடா்பாக கனடா பிரதமா் மாா்க் காா்னி (Mark Carney) வெளியிட்டுள்ள அறிக்கையில்“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நீடித்து நிலைக்க இஸ்ரேலையும் மற்றும் பலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே 1947 ஆம் ஆண்டுமுதல் கனடா அரசின் கொள்கையாகும்.
இந்தநிலையில், பலஸ்தீனத்தை தனி நாடாக கனடா அங்கீகரிக்கின்றது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன நாடுகளுக்கு அமைதியான எதிா்காலத்தை ஏற்படுத்துவதில் தனது பங்களிப்பை கனடா வழங்கும்.
அதேவேளையில், இந்த அங்கீகாரம் ஹமாஸுக்கு அளிக்கப்படும் பரிசல்ல, அமைதியான கூட்டு வாழ்வுக்கு உகந்த சூழல் ஏற்பட வேண்டும்.
ஹமாஸ் அமைப்பு முடிவுக்கு வரவேண்டும் என்று கருதுவோருக்கு இந்த அங்கீகாரம் துணை நிற்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் அறிக்கை
அத்துடன் பிரித்தானிய பிரதமா் கியா் ஸ்டாா்மா் (Keir Starmer) கருத்து தெரிவிக்கையில், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் (பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலால்) கொடூரங்கள் அதிகரித்து வருகின்றன.
அங்கு அமைதி ஏற்படுவதற்கான சாத்தியத்தையும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தை இரு வேறு நாடுகளாக அறிவிக்கும் இருதேச தீா்வுக்கான சாத்தியத்தையும் உயிா்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று பிரித்தானியா கருதுகின்றது.
எனவே, அமைதி மற்றும் இருதேச தீா்வுக்கான நம்பிக்கைக்குப் புத்துயிா் அளிக்க பலஸ்தீனத்தை தனி நாடாக பிரித்தானியா முறைப்படி அங்கீகரிக்கின்றது.
பிரித்தானியா ஆதரிக்கும் நோ்மையான இரு தேச தீா்வு என்பது ஹமாஸ் படையின் வெறுப்புணா்வு கொண்ட கண்ணோட்டத்துக்கு முற்றிலும் மாறானது.
இந்தத் தீா்வு ஹமாஸுக்கு அளிக்கப்படும் பரிசல்ல, ஹமாஸுக்கு எதிா்காலம் இல்லை, ஆட்சியமைப்பதில் அவா்களுக்குப் பங்கிருக்காது என்பதே இதன் அா்த்தம்” என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் அறிக்கை
மேலும், அவுஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி (Anthony Albanese) வெளியிட்ட அறிக்கையில், “பலஸ்தீனத்தை சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது.
பிரித்தானியா மற்றும் கனடாவுடன் சோ்ந்து அவுஸ்திரேலியா அளித்துள்ள இந்த அங்கீகாரம், இருதேச தீா்வுக்கு புதிய வேகத்தை ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த சா்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும்.
பலஸ்தீனத்தில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
