வரலாற்றில் மிகவும் பயங்கரமான சூறாவளி...! பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஜமைக்காவை (Jamaica) மெலிசா புயல் தாக்கியுள்ள நிலையில், அங்கு சிக்கிக் கொண்டுள்ள பிரித்தானியர்களை (UK) மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நூற்றாண்டின் மிகப்பெரும் சூறாவளி என்றும், 174 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட மெலிசா புயல் (Hurricane Melissa) ஜமைக்காவை கடுமையாக தாக்கி உள்ளது. ஜமைக்காவை பேரிடர் பகுதியாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.
சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்பு
இந்த புயல் காரணமாக பலத்த மழை மற்றும் சீற்றமான கடல் அலைகள் காரணமாக அங்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் என பல கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

புயல் தற்போது கரயைக் கடந்தாலும், ஜமைக்கா இன்னும் தப்பவில்லை என்றும், புயலின் சீற்றம் இன்னும் நாடு முழுவதும் காணப்படுவதாக அமைச்சர் எச்சரித்துள்ளார்.
எனினும், சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
வாடகை விமானங்கள்
இந்நிலையில், ஜமைக்காவிற்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்ற சுமார் 8000 பிரித்தானியர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.
அவர்களை மீட்பதற்காக சில விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
“Register Your Presence போர்டல் மூலம் ஏற்கனவே பதிவு செய்துள்ள அனைத்து பிரித்தானியர்களுக்கும் விமான நிலையங்கள் திறந்தவுடன் தானாகவே தொடர்பு கொள்ளப்பட்டு முன்பதிவு போர்ட்டலுக்கான (portal) இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பதிவு படிவத்தை அனுப்ப வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தை +1 (876) 936 0700 அல்லது +44 (0)20 7008 5000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        