பிரித்தானியாவில் புதிய பொருளாதார திட்டம் அறிவிப்பு
பிரித்தானியா பொருளாதார மந்தநிலைக்கு சென்றுள்ளதாக அறிவித்துள்ள நிதி அமைச்சர் ஜெரமி ஹண்ட், ஏழ்மை நிலையிலுள்ள மக்களை பாதுகாக்கும் விடயத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் ஜெரமி ஹண்டின் பொருளாதார திட்டங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள தொழிற்கட்சி, மக்கள் எதிர்நோக்கியுள்ள கடினமான பொருளாதார நெருக்கடிகளுக்கு கென்சவேட்டிவ் கட்சி அரசாங்கத்தின் தவறுகளே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது.
பிரித்தானிய நிதி அமைச்சர் ஜெரமி ஹண்ட், இலையுதிர்கால பொருளாதார திட்டத்தை இன்று அறிவித்துள்ளார்.
இலையுதிர்கால பொருளாதார திட்டம்
இந்தத் திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான பில்லியன் வரி உயர்வுகள் மற்றும் செலவுக் குறைப்புகள் தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
வருமான வரி வரம்புகளில் முடக்கும் ஜெரமி ஹண்ட்டின் அறிவிப்பு மூலம் மில்லியன் கணக்கான மக்கள் அதிகமான வரியை செலுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனினும் தனது திட்டம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் கடனைக் குறைக்கவும் உதவும் என இலையுதிர்கால பொருளாதார திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ந்த வருமானம் பெறுவோர் அதிகமான வரியை செலுத்த வேண்டும் என்பதுடன், உயர் வருமானம் என்பது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பவுண்ஸ்சில் இருந்து ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 140 பவுண்ஸ்சாக குறைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி நிறுவனங்களுக்கான வரியானது 25 வீதத்தில் இருந்து 35 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இலத்திரனியல் வாகன உரிமையாளர்களும் வரி செலுத்த வேண்டும் என ஜெரமி ஹண்ட் அறிவித்துள்ளார்.
23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய வாழ்க்கை ஊதியம் மணித்தியாலத்திற்கு 9.50 பவுண்ஸ்சில் இருந்து 10.42 பவுண்ஸ்சாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
எரிசக்தி கட்டணங்களுக்கான ஆதரவு
செப்டம்பர் மாதம் பணவீக்கத்திற்கு ஏற்ப, அரச ஓய்வூதியம், சலுகைகள் மற்றும் வரிச் சலுகைகளில் 10.1 வீத உயர்வு வழங்கப்படும் எனவும் பிரித்தானிய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
குறைந்த வருமானம், ஊனமுற்றோர் நலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வாழ்க்கை செலவுக்கான உதவித் தொகையாக 150 பவுண்ஸ் முதல் 900 பவுண்ஸ் வரை வழங்கப்படவுள்ளது.
எரிசக்தி கட்டணங்களுக்கான ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற போதிலும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எரிசக்திக்காக மக்கள் அதிகமான பணத்தை செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதார வரவு செலவுத் திட்டம் பாதுகாக்கப்படும் என்பதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளும் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடுகள் தலா 3.3 பில்லியன் பவுணஸ்சினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள அணு உலை மின் உற்பத்தி திட்டமானது திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ள ஜெரமி ஹண்ட், இதன் மூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஆறு மில்லியன் மக்களுக்கான மின் விநியோகத்தை வழங்க முடியும் என கூறியுள்ளாார்.
பொருளாதார மந்த நிலை
எனினும் 2030 ஆம் ஆண்டு வரை அணு மின் உற்பத்தி திட்டம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாது என்ற நிலையில், இது அதிக செலவு மிக்கது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் பொருளாதார மந்த நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்கள், தொழில் செய்யும் மக்கள் மீது வரிகளையோ செலவீனக் குறைப்புகளையோ திணிக்கவில்லை என தொழிற்கட்சியின் நிழல் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த மாதம் கொந்தளிப்பை ஏற்படுத்திய குறுகிய வரவு செலவுத் திட்டத்திற்கும் தமக்கு தொடர்புகள் இல்லை என்பது போன்று பாசாங்கு செய்வதற்கு ரிஷி சுனாக்கின் அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

