ரிஷி சுனக்கின் புதிய பொருளாதார திட்ட அறிவிப்பு - பிரித்தானியர்களுக்கு கடுமையான செய்தி
பிரித்தானியா கடுமையான பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையில், அனைவரும் அதிகமான வரியை செலுத்த வேண்டும் என நிதி அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
பொருளாதார திட்ட அறிவிப்பை எதிர்வரும் வியாழக்கிழமை வெளியிடவுள்ள நிலையில், ஜெரமி ஹண்டின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கின் கீழ் வெளியிடப்படவுள்ள புதிய பொருளாதார திட்ட அறிவிப்புகள் குறித்து அனைவரினதும் கவனமும் திரும்பியுள்ளது.
கடினமான தீர்மானங்கள்
அந்த வகையில் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் மிகவும் கடினமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் ஜெரமி ஹண்ட் கூறியுள்ளார்.
இந்தத் திட்டங்கள் ஊடாக பொதுச் செலவீனங்களை 35 பில்லியன் பவுண்ஸ்சினால் குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஜெரமி ஹண்ட் கூறியுள்ளார்.
அத்துடன் வரி வருமானங்களையும் சுமார் 20 பில்லியன் பவுண்ஸ்சினால் அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வீட்டு மின் கட்டணங்கள் தொடர்பில் குடும்பங்களுக்கு உதவிகள் அளிக்கப்படும் என்ற போதிலும் அதில் கட்டுப்பாடுகள் இருக்கும் என ஜெரமி ஹண்ட் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு தசாப்த கால கென்சவேட்டிவ் கட்சியின் நிர்வாகத்தின் கீழ் பலவீனமான வளர்ச்சி மற்றும் சமத்துவமின்மை அதிகரித்துள்ளதாக எதிர்கட்சியான தொழிற்கட்சி குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார பின்னடைவு
அத்துடன் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை சர்வதேச ரீதியில் பின்னடைவுக்குள் தள்ளியுள்ளதாகவும் தொழிற்கட்சி மேலும் கூறியுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவின் பொருளாதாரம் கடந்த ஜுலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 0.2 வீதத்தால் சுருங்கியுள்ளது.
இதன்மூலம் பிரித்தானியாவின் பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அடுத்த ஆறு மாதங்களில் இரண்டு தடவைகள் பொருளாதார சுருக்கமானது ஏற்படும் பட்சத்தில் நாடு, தொழிற்நுட்ப ரீதியில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
