பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் அரசாங்கத்திற்கு பெரும் சிக்கல்! பதவி விலகிய முக்கிய புள்ளி
பிரித்தானிய சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) வியாழக்கிழமை அன்று தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கம் அரசியல் ரீதியாக திசைமாறிச் செல்வதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், ஸ்டார்மரால் அடுத்த பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியைவழிநடத்த முடியாது என்பது இப்போது தெளிவாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆளும் தொழிற்கட்சி சந்தித்த பாரிய தோல்விகளே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
தொழிற்கட்சியின் அடுத்த தலைமைத்துவம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய ஸ்டார்மர், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்.எனினும், தற்போதைய தேர்தல் முடிவுகள் கட்சியைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

Image Credit: BBC
தனது பதவி விலகல் கடிதத்தில் ஸ்ட்ரீட்டிங், "எங்களுக்குத் தொலைநோக்குப் பார்வை தேவைப்படும் இடத்தில் ஒரு வெற்றிடமே உள்ளது; வழிகாட்டல் தேவைப்படும் இடத்தில் திசைமாற்றம் உள்ளது" என ஸ்டார்மரை நேரடியாக விமர்சித்துள்ளார்.
மேலும், தொழிற்கட்சியின் அடுத்த தலைமைத்துவம் குறித்து ஆளுமைகள் அல்லது குழுக்களைத் தாண்டிய ஒரு பரந்த விவாதம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெஸ் ஸ்ட்ரீட்டிங்கின் இந்த வெளியேற்றம் கீர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்திற்கு எதிரான ஒரு நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.
தலைமைத்துவப் போட்டி
இதேவேளை, மென்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) போன்ற ஏனைய முக்கிய தலைவர்களும் அடுத்தகட்டத் தலைமைத்துவப் போட்டிக்காகத் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர்.இருப்பினும், எத்தகைய சவால்களையும் தான் எதிர்கொள்ளத் தயார் என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

Image Credit: TIME
ஸ்ட்ரீட்டிங்கிற்குப் பதிலாக ஜேம்ஸ் முர்ரே (James Murray) புதிய சுகாதார அமைச்சராக உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய இந்த அரசியல் சூழல், பிரித்தானியாவில் மீண்டும் ஒரு அரசியல் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |