கடும் மழைகாரணமாக சிறு தடங்கல்கள் ஏற்பட்ட லிஸ் ட்ரஸின் முதலாவது உரை! புதிய அமைச்சரவையை அமைப்பதில் மும்முரம்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ் தனது அமைச்சரவையை அமைப்பதில் மும்முரம் காட்டிவருவதாக தெரியவருகின்றது.
முன்னதாக ஸ்கொட்லாந்தின் பல்மோரல் கோட்டைக்கு சென்று ராணி எலிசபெத் முன்னால் பதவியேற்ற பின்னர் பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக ட்ரஸ் பதிவாகியிருந்தார்.
கடும் மழைகாரணமாக தடங்கல்கள்
அதன்பின்னர் மழைபொழிவுக்கு மத்தியில் விமானம் மூலம் லண்டன் நோர்த்ஹோல்ட் வான்படைத்தளத்துக்கு மாலை நான்கு மணியளவில் திரும்பியிருந்தார்.
அங்கிருந்து வீதிவழியாக தனது புதிய அதிகாரபூர்வ வதிவிடமான நம்பர் 10 க்கு திருப்பியபோது கடும் மழைகாரணமாக அவரது பதவியேற்புக்கு பின்னரான உரை முன்னேற்பாடுகளில் சிறிய தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன.
முதலாவது உரை
மழைகாரணமாக பிரதமர் வதிவிடத்தின் ஒலிவாங்கிபீடம் அடிக்கடி மூடப்பட்டிருந்தது எனினும் மாலை 5 மணிக்குப்பின்னர் நம்பர் 10 க்கு ஆதரவாளர்களின் கரவொலியுடன் திரும்பிய ட்ரஸ் அங்கு அனைத்துலக ஊடகங்கள் அரச பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூடியிருக்க பதவியேற்புக்குப் பின்னரான முதலாவது உரையை வழங்கியிருந்தார்.
அதில் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு முதலில் நன்றிதெரிவித்த பின்னர், ரஷ்யாவின் போர் குறித்த விமர்சனத்தை தொடுத்த பின்னர் பிரித்தானியர்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மூன்று முன்னுரிமைகளில் தீர்வு வழங்கப்போவதாவும் குறிப்பிட்டிருந்தார்.
லிஸ் ட்ரஸின் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற முன்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகி முன்னாள் பிரதமராக மாறிய பொறிஸ் ஜோன்சன் முன்னணி அரசியலில் இருந்தும் ஓய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
