சட்டவிரோத குடியேற்ற அணுகுமுறை : சுனக் அரசாங்கத்திற்கு சவாலாக மாறிய தீர்ப்பு
பிரித்தானியாவுக்குள் தமது புகலிடக் கோரிக்கைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட குடியேறிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இன்று பிரித்தானிய உச்ச நீதிமன்றம் புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவுக்குள் நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் முடிவு சட்டபூர்வமானது அல்ல என்ற முடிவை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த முடிவு குடியேறிகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு சவாலாக மாறியுள்ளது.
அரசாங்கத்துக்கு கடுமையான அடி
ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசாங்கத்தின் ருவாண்டா நாடு கடத்தல் கொள்கையின் எதிர்காலத்தை இன்று எதிர் மறையாக தீர்மானித்த விடயம் பிரித்தானியாவுக்குள் தமது புகலிடக் கோரிக்கைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட குடியேறிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் வெற்றியையும் நம்பிக்கையை வழங்கியுள்ளது.
மறுதலையாக உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு ரிசி சுனக் அரசாங்கத்துக்கு கடுமையான அடியை வழங்கியுள்ளது.
ரிஷி சுனக்கின் ஐந்து உறுதிமொழிகளில் ஒன்றான பிரித்தானியா நோக்கி வரும் படகுகளை நிறுத்துவது என்ற முதன்மைக் கொள்கை இந்தத் தீர்ப்பினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
முன்னைய உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னரும் சட்டவிரோத குடியேற்றத்திற்கான சுனக்கின் அணுகுமுறையை பிரேவர் மேன் பகிரங்கமாக சாடிய 24 மணி நேரத்திலும் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
அரசாங்கம் விரும்பிய முடிவு அல்ல
பிரித்தானியாவுக்குள் நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் அராங்கத்தின் முடிவு சட்டபூர்வமானது அல்ல என்ற முடிவை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய பின்னர் இந்த தீர்ப்பு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள பிரதமரின் பணியகம், இந்த தீர்ப்பு அரசாங்கம் விரும்பிய முடிவு அல்ல என்றாலும் படகுகளை நிறுத்துவதில் தமது தரப்பு உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரீட் பிரபு தனது தீர்ப்பில் நீதிமன்றத்தின் முடிவு முற்றிலும் ஆதாரங்கள் மற்றும் சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையிலானது எனவும் நீதிமன்றத்துக்கு அரசியல் விவாதத்தில் அக்கறை இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.