கருணா அம்மான் உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை : வரவேற்ற சிறீதரன் எம்.பி
இலங்கை (SriLanka) அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் (United Kingdom) விதித்துள்ள தடைகள் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரித்தானிய அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது.
மனித உரிமை மீறல்கள்
இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடாத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரித்தானிய அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதிகோரும் பயணத்தில் தமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத்தமிழர்கள் பார்க்கிறார்கள்.
எண்பது வருடங்களுக்கு மேலாக கேட்பாரற்று படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு தமக்கான நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத்தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
