பிரித்தானிய விசா விதிகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்
பிரித்தானிய (UK) அரசாங்கத்தின் 2025 குடிவரவு வெள்ளை அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் அந்நாட்டின் குடிவரவு முறையில் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.
புலம்பெயர்வோரின் மொத்த எண்ணிக்கையை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விதிகளின் அடிப்படையில் நிரந்தரக் குடியுரிமை, திறன் வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விசா தேவையில்லாத நாடு
விசா தேவையில்லாத சுமார் 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்னதாகவே மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது.

“அனுமதி இன்றி பயணம் இல்லை” (No permission, no travel) என்ற இந்த விதி பெப்ரவரி 25 முதல் முழுமையாக அமுலுக்கு வரும். இதற்கான கட்டணம் £16 ஆகும்.
இது இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விசா
முக்கிய வேலைவாய்ப்பு விசாக்களுக்கான ஆங்கில மொழித் தகைமை விதிகள் ஜனவரி 8 முதல் கடுமையாக்கப்படுகின்றன.

‘திறன்மிக்க பணியாளர்’ (Skilled Worker), ‘ஸ்கேல்-அப்’ (Scale-up) மற்றும் ‘உயர் திறன் தனிநபர்’ (High Potential Individual) விசாக்களுக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள், தற்போதுள்ள B1 தரத்திற்குப் பதிலாக B2 தரத்திலான ஆங்கிலப் புலமையை நிரூபிக்க வேண்டும்.
பணியிடத் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஏற்கனவே இந்த விசாக்களில் இருப்பவர்கள் தங்களது விசாவை நீட்டிக்கும்போது இது பாதிக்காது.
நிரந்தரக் குடியுரிமை
நிரந்தரக் குடியுரிமை (Settlement/ILR) பெறுவதற்கான தகுதிக்காலத்தை தற்போதுள்ள 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

அத்துடன், அதிக வருமானம் ஈட்டியதற்கான சான்றுகள் மற்றும் உயர் ஆங்கில மொழிப் புலமை போன்ற நிபந்தனைகளும் இதில் சேர்க்கப்படலாம்.
இந்த மாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டால், ஏப்ரல் 2026 முதல் நடைமுறைக்கு வரும். ஏற்கனவே குடியுரிமை பெற்றவர்களுக்கு இது பொருந்தாது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |