ரஷ்யாவிடம் சரணடைதல் என்ற பேச்சுக்கே இடமில்லை : உக்ரைன் ஆணித்தரம்
ரஷ்யாவிடம்(russia) சரணடைதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என உக்ரைன்(ukraine) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் அனைத்து பிரதேசங்களையும் உக்ரைன் விட்டுக்கொடுக்கும் ஒரு ஒப்பந்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவு பற்றிய ஊடக தகவல்கள் வெளிவந்த நிலையில் உக்ரைன் துணைப் பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ இவ்வாறு கூறியுள்ளாா்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போர் விவகாரம் தொடர்பில் லண்டனில் பேச்சு
போா் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நட்பு நாடுகளின் தலைவா்களை எங்களின் பிரதிநிதிகள் தற்போது லண்டனில் சந்தித்துப் பேசிவருகின்றனா். இந்தச் சூழலில் நாங்கள் தெரிவித்துக்கொள்ள விரும்புவது, போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைக்கு உக்ரைன் எப்போதுமே தயாராக இருக்கிறது; ஆனால் ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது.
ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படக் கூடிய எந்த ஒப்பந்தமும், அந்த நாடு தனது படைகளை மீண்டும் திரட்டவும், கூடுதல் பலத்துடன் எங்கள் மீது தாக்குதல் நடத்தவும் அந்த நாட்டுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக இருக்கக் கூடாது.
ரஷ்யாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமென்றால் அது முழுமையானதாக இருக்க வேண்டும். தரை, வான், கடல் என்று எந்த வழியான தாக்குதலுக்கும் அது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுதான் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படி.
தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க தயாரில்லை
ஆனால் குறிப்பிட்ட அளவிலான போா் நிறுத்தத்தை மட்டுமே ரஷ்யா விரும்பினால், உக்ரைனும் அதற்கு எதிா்வினையாற்றும். அமைதி என்ற பெயரில் தற்காலிகமாக மோதல் நிறுத்திவைக்கப்படுவதை உக்ரைன் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள்.
கிரீமியாவை (உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷியாவால் ஒருதலைபட்சமாக இணைந்துக்கொள்ளப்பட்ட தீபகற்பம்) ரஷ்யாவின் ஒரு பகுதியாக நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம்.
நேட்டோவில் உக்ரைனைச் சோ்ப்பதில்லை என்று முடிவெடுத்தால், குறைந்தபட்சம் பாதுகாப்பு உத்தரவாதத்தையாவது அந்த அமைப்பு உக்ரைனுக்கு அளிக்க வேண்டும். அத்தகைய உத்தரவாதம், எதிா்காலத்தில் உக்ரைன் மீது யாரும் படையெடுப்பதை தடுத்து நிறுத்தும் அளவுக்கு உறுதியானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளாா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
