உக்ரைனுக்கு நிறுத்தப்பட்ட ஆயுத உதவி: ட்ரம்பின் முடிவுக்கு எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) முடிவால், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள் என உக்ரைன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை உக்ரைன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸி கோன்சரென்கோ(Oleksiy Goncharenko)தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை(28) வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த கருத்து மோதல்களுக்கு ஜனாதிபதி ட்ரம்பிடம் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy ) மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் முடிவு
இது தொடர்பில் உக்ரைன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது, “ட்ரம்பின் இந்த முடிவானது பேரழிவை ஏற்படுத்தும் என்பதுடன் இந்த நெருக்கடியில் இருந்து வெளியேற இயன்றதனைத்தையும் ஜெலென்ஸ்கி முன்னெடுக்க வேண்டும்.
எனினும், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனாதிபதி ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அமெரிக்க ஆதரவை அவர் நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும், மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க இன்னமும் வாய்ப்பிருப்பதாகவே ட்ரம்ப் சூசகமாக தெரிவித்து வருகிறார்.
உக்ரைனில் இருந்து 500 பில்லியன் டொலர் மதிப்பிலான கனிம வளங்களை குறிவைத்துள்ள ட்ரம்ப், அந்த ஒப்பந்தம் செயலுக்கு வராததாலையே கடும் கோபத்தில் காணப்படுகிறார்.
ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள கோரிக்கை
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பை உறுதி செய்ய ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள கோரிக்கைகளை ட்ரம்ப் ஏற்க மறுத்த காரணத்தால் அந்த ஒப்பந்தம் அமையாமல் போனது.
இதனையடுத்தே வெள்ளை மாளிகையில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என ஜெலென்ஸ்கியை ட்ரம்ப் மிரட்டினார்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 'கனிம வள ஒப்பந்தமானது உக்ரைனுக்கு ஒரு பாதுகாப்பு உத்தரவாதமாக மட்டும் போதுமானதாக இல்லை என்றும் உக்ரைனில் அமைதிப்படையாக ஐரோப்பிய இராணுவம் களமிறங்கினாலும் அமெரிக்காவின் ஆதரவு தேவைப்படும்' எனவும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 1 மணி நேரம் முன்
