போலந்தில் இருவரின் உயிரைப்பறித்த ஏவுகணைத் தாக்குதல் - விசாரணைக் களத்தில் நேட்டோ மற்றும் அமெரிக்கா!
போலந்தில் இருவரின் உயிர்களை காவுகொண்ட ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மாறாக குறித்த ஏவுகணையை உக்ரைனே செலுத்தியுள்ளதாக அமெரிக்காவின் மூன்று அதிகாரிகளை மேற்கோள்காட்டி அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் எல்லையிலுள்ள போலந்து பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையே இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதனை யார் செலுத்தியது என்பதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என போலந்து அதிபர் அன்சே டூடா தெரிவித்துள்ளார்.
ஆத்திரமடைந்த ரஷ்யா
இந்த நிலையில் தமது நாடே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக போலந்து ஊடகங்களும் அதிகாரிகளும் வெளியிடும் அறிக்கைகள் திட்டமிட்ட வகையில் நிலைமையை மேலும் தீவிரமடையச் செய்யும் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளாக உள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை.
குறித்த பகுதியில் ரஷ்யா எந்தவொரு தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த ஏவுகணையானது ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்டவில்லை என்பது ஆரம்ப கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தீவிர விசாரணையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ
எனினும் இது தொடர்பான முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை இதனை யார் செலுத்தினார்கள் என்பது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவும் நேட்டோவும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் என பைடன் தெரிவித்துள்ளார் .
