தலைநகரை நோக்கி தீவிர தாக்குதலுடன் முன்னேறும் ரஷ்ய படைகள்- மக்களின் அதிரடி நடவடிக்கை!
உக்ரைன் ரஷ்யா இடையே இன்று 7ஆவது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனின் தலைநகரான கீவ் நகரை முழுமையாக கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன.
இதேபோல் உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் மீதும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. சுமி நகரின் மீதும் ரஷிய விமானப்படை செல் குண்டுகள் பொழிந்து தாக்கி வருகிறது.
கெர்சன் நகரை ரஷ்ய படை கைப்பற்றி உள்ளது. ரஷ்ய படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இதுவரை 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ரஷ்ய படையினர் நடத்தி வரும் தாக்குதல்களிலும் உக்ரைன் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவ வாகனங்களும் எரிந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் தப்புவதற்காக உக்ரைன் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மாணவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழியாக நடந்தே செல்லவேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், தலைநகர் கீவை முழுமையாக கைப்பற்றும் வகையில் ரஷ்ய படைகள் இன்று முன்னேறத் தொடங்கினர். மேலும், ரஷ்ய படையினர் ஸபோரிஷ்யா அணுமின் நிலையத்தை கைப்பற்றப்போவதாக தகவல் வெளியானது.
எனவே, அவர்களை முன்னேறாமல் தடுப்பதற்காக, சேதமடைந்த ரஷ்ய வாகனங்களை சாலையின் நடுவே வைத்து பொதுமக்கள் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணுமின் நிலைய ஊழியர்கள் சாலைகளில் திரண்டுள்ளனர். உக்ரைன்-ரஷ்யா இடையே பெலாரசில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இன்று இரவு 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
பெலாரஸ் - போலந்து எல்லையில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
