வாக்னர் குழு பின்னணியில் அமெரிக்காவா..! உளவுத்துறை வெளியிட்ட தகவல்
ரஷ்யாவில் வாக்னர் குழுவால் ஏற்பட்ட குழப்பங்களின் பின்னணியில் அமெரிக்கா உள்ளது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானவை என அமெரிக்க உளவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிற்காக போரிட்ட வாக்னர் அமைப்பானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய இராணுவம் மற்றும் அதிபர் புடினுக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து புடினுக்கு எதிராக, எவ்செனி பிரிகோசின் என்பவரின் தலைமையிலான வாக்னர் படை மொஸ்கோ நோக்கி படையெடுத்தது.
இந்நிலையில், இந்த விடயம் பெரும் கிளர்ச்சியாக மாறும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் இதற்கான சுமூகமான தீர்வொன்றை எட்டியிருந்தார்.
அதேவேளை, தனக்கும், தன் நாட்டிற்கும் எதிரான இக்கலக முயற்சிக்கு காரணம் யார்? என்பதை கண்டறிய புடின், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர், இக்கிளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் மறைமுக காரணம் என குற்றஞ்சாட்டி வந்தார்.
கூலிப்படையினரின் கலகம்

இதற்கமைய, அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. நிறுவனத்தின் இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ், ரஷ்ய நாட்டின் உளவுத்துறை அமைப்பின் தலைவரான செர்ஜி நரிஷ்கினை அழைத்து அந்நாட்டில் நடந்த அந்த குறுகிய கால கலகத்தில், அமெரிக்காவின் பங்களிப்பு எதுவும் இல்லை என பேசியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதேவேளை, ரஷ்யாவிற்கு எதிரான வாக்னர் கூலிப்படையினரின் கலகம், அங்கு நடைபெற்ற உள்நாட்டு போராட்டத்தின் ஒரு பகுதி என்றும், அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் அதில் ஈடுபடவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.