ரஷ்யா உக்கிர தாக்குதல் - உக்ரைன் துருப்புகளுக்கு வெளியேற உத்தரவு
ரஷ்யா கடுமையான தாக்குதல்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தற்போதைய நிலவரப்படி, முக்கிய கிழக்கு நகரத்தில் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைனிய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்குலக நாடுகள் ரஷ்யாவை எதிர்கொள்ளும் வகையிலான ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருகின்ற போதிலும், இந்த பின்வாங்கல் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனியப் படைகள் முக்கிய கிழக்கு பகுதியான செவெரோடோனெட்ஸ்கில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக உக்ரைனிய உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யப் படைகள் குறித்த பிராந்தியத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதால், செவெரோடோனெட்ஸ்க் பல வாரங்களாக கடும் தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் எதிர்கொண்டது.
பின்வாங்கல் உற்றுநோக்கல்
எனினும் இந்த பின்வாங்கல்களால் லிசிசான்ஸ்க்(Lysychansk) நகரத்தைத் தவிர லுஹான்ஸ்க் முழுவதும் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
கிழக்கு உக்ரைனில் முக்கியமாக ரஷ்ய மொழி பேசும் பகுதியான லுஹான்ஸ்க், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு முக்கிய முன்னுரிமையாக கருதப்படுகின்றது.
டோனெட்ஸ்க் பகுதியுடன் சேர்ந்து, இது குறிந்த பிராந்தியம் டொன்பாஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பாரிய, தொழில்துறை பகுதியாக காணப்படுவதுடன், 2014 முதல் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத இயக்கத்தின் மையமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

