மீறப்பட்டது யுத்த நிறுத்தம்- நிறுத்தப்பட்டது மக்களை வெளியேற்றும் திட்டம்!
மரியுபோல் பகுதியில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை உக்ரேனிய அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் போர் நிறுத்தம் மீறப்பட்டத்தை தொடர்ந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவில் போர்நிறுத்தம் உக்ரைன் நேரப்படி 09:00-16:00 (07:00-14:00 GMT) வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து பொதுமக்களின் வெளியேற்றம் அந்நாட்டு நேரப்படி 11:00 மணிக்கு (09:00 GMT) ஆரம்பிக்கப்பட்டது. எனினும் மனிதாபிமான வழித்தடம் முடிவடையும் ஸபோரிஸியா பகுதியிலும் சண்டை நடைபெற்று வருவதாக நகர சபை தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே மக்கள் வெளியேறுவதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
